தமிழ்நாட்டில் அதிகரிக்கும் இந்தி மக்கள் வருகை – நல்லதா? கெட்டதா?

 தமிழ்நாட்டில் அதிகரிக்கும் இந்தி மக்கள் வருகை – நல்லதா? கெட்டதா?


ஹிந்தி மக்கள் வருகை அதிகரிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதா? கெட்டதா?

தமிழகத்தில் இந்தி மக்கள்


இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகத் தொடங்கிய காலத்தில், வேலைக்கு தமிழ் மக்களை தேடி வாகனங்கள் கிராமம் கிராமமாகச் சென்று அழைத்து வந்த காலம் இருந்தது. அந்த நாட்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த இந்தி பேசும் மக்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள். ஒரு ஊரில் ஐந்து பேர், இன்னொரு இடத்தில் பத்து பேர் என்ற அளவில் வேலை கற்றுக்கொண்டு தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது. தமிழ்நாட்டின் எந்த நகரத்திற்கோ, எந்த கடைவீதிக்கோ சென்றாலும் இந்தி பேசும் மக்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். தொழிற்சாலை முதல் தேநீர் கடை வரை, கட்டுமானம் முதல் டெலிவரி வேலை வரை பல துறைகளில் அவர்கள் கால்பதித்திருக்கிறார்கள். இந்த அதிகரிப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி இன்று பல தமிழ் மக்களின் மனதில் எழத் தொடங்கியுள்ளது.


தமிழ் மக்களின் மனதில் உருவாகும் அச்சம்


சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியையும், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோவையும் பார்த்தபோது மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தமிழ் நபரை தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதைவிட வேதனை அளித்த விஷயம், அந்த இடத்தில் இருந்த தமிழ் மக்கள் பலரும் அதை பார்த்துக்கொண்டே நின்றார்கள் என்பதுதான். யாரும் தைரியமாக குரல் கொடுக்க முடியாத நிலை உருவாகி இருப்பது, தமிழர்களின் பாதுகாப்பு குறித்த ஒரு புதிய அச்சத்தை உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் வாழும் மக்களே தங்களுடைய மண்ணில் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ வேண்டிய சூழல் உருவாகக்கூடாது என்பதே பலரின் கவலையாக உள்ளது.


வட மாநில தொழிலாளர்கள் அதிகரிப்பும் சமூக மாற்றமும்


ஒரிசா, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கடின உழைப்பாளிகள் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் சிலரின் பொறுப்பற்ற செயல்கள் சமூகத்தில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன. சில இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் செல்லுதல், மது போதையில் சுற்றித்திரிவது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. இதை விட முக்கியமாக, சட்ட விதிகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழ் மக்களிடம் கடுமையாக நடக்கும் அதிகாரிகள், சில சமயங்களில் வட மாநில தொழிலாளர்களிடம் அமைதியாக இருப்பது போன்ற தோற்றம் உருவாகும்போது பொதுமக்களின் மனதில் ஏமாற்றம் உருவாகிறது.


தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து எழும் கேள்விகள்


இன்றைக்கு தமிழகத்தின் பல தொழில்கள் வட மாநில தொழிலாளர்களை நம்பி இயங்குகின்றன என்ற நிலை உருவாகியுள்ளது. இது ஒருபுறம் தொழில்துறையின் தேவையாக இருந்தாலும், மறுபுறம் தமிழர்களின் வேலை வாய்ப்பு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. “தமிழகம் தமிழர்களுக்கான இடமா? அல்லது மெதுவாக மொழி மற்றும் அடையாளம் மாறிக்கொண்டிருக்கும் மாநிலமா?” என்ற அச்சம் சிலரிடம் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த அச்சம் வெறுப்பாக மாறாமல், சமூக சிந்தனையாக மாற வேண்டும். தமிழர்களின் உரிமை, வேலை வாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் அரசும் சமூகமும் சமநிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலம் இது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்